சிபிராஜின் படத்தில் பூஜா குமார்!

கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் படம் பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதோ இந்த வரிசையில் இப்போது இன்னும் ஒரு செய்தி. ‘விஸ்வரூபம்’ படப்புகழ் பூஜா குமார் ‘கபடதாரி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளரான டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இது குறித்து தெரிவிக்கையில், ‘கபடதாரி’ படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், படத்தின் தீவிர தன்மையை மேலும் அதிகப்படுத்துகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்துவதுடன், பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் ஒருசேரத் தரும் வகையில் அமைந்ததாகும். ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ மற்றும் ஆங்கிலப் படங்களில் பாராட்டுதல்களுக்குரிய வகையில் நடித்த பூஜா குமாருடன் பணியாற்றும் அனுபவத்துக்காக எங்கள் படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்கிறது” என்றார்.

படத்தின் தலைப்பு, திறமை மிகு நட்சத்திரப் பட்டாளம் முத்திரை பதிக்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கபடதாரி படம் எதைப்பற்றி பேசுகிறது என்பது குறித்து ஜி.தனஞ்ஜெயன் என்ன சொல்கிறார்…
பல திருப்பங்களுடன் கூடிய திரில்லர் வகைப்படம் கபடதாரி. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், இந்தத் திருப்பங்களில் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் இதன் சிறப்பு. அதிகபட்சம் இதை மட்டுமே என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும் என்கிறார்.

கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்துக்காக லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் கபடதாரி படத்தை சத்யா சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் கிரியேடிவ் தயாரிப்பாளராகவும், என்.சுப்ரமணியம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கின்றனர். சிபிராஜ், நந்திதா பிரதான வேடங்களில் நடிக்க நாசர், பூஜா குமார், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


சைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை கே.எல்.பிரவீண் கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விதேஷ். ஹேமந்த் ராவ் கதைக்கு ஜான் மகேந்திரன் மற்றும் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகின்றனர்.
2019ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி படப்பிடிப்பை துவங்கி, 2020 மார்ச் மாதம் உலகெங்கும் திரையிடப்படுகிறது கபடதாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: