இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி சர்வர் சுந்தரம் ரிலீஸ்!

சந்தானம் நடிப்பில்  “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ஜனவரி 31  வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்ததையொட்டி இரு தயாரிப்பாளர்கள் இடையேயும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதனையடுத்து “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களின் தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதி ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, தயாரிப்பாளர் ராஜன்  “சர்வர் சுந்தரம்” படத்தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் “டகால்டி” படத்தயாரிப்பாளர் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது…


வரும் 31 ந்தேதி சர்வர் சுந்தரம், டகால்டி படங்கள் வருவதாக விளம்பரங்கள் வெளிவந்தன. இரு படங்களும் ஒரே நாளில் வருவதால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவுரையை ஏற்று இப்போது டகால்டி மட்டும் 31ந்தேதி வருகிறது. சர்வர் சுந்தரம்  பிப்ரவரி 14 ல் வருவதாக ஒப்புக்கொண்டனர். யாருடைய படத்தையும் இந்த தேதியில் வாருங்கள் என சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் சினிமாவின் நலம் கருதி எங்களுக்குள் பேசி இந்த முடிவுக்கு வந்தோம். இந்த முடிவுக்கு ஒத்துழைத்த இரு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

“சர்வர் சுந்தரம்” படத்தயாரிப்பாளர் செல்வகுமார்  பேசியது ….


இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி இப்போது இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய முற்பட்டோம். சந்தானம் அவர்களின் மற்றொரு படமான “டகால்டி” படமும் அதே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருவருக்கும் நலம் பயக்கும் வகையில் எங்கள் படம் பிப்ரவரி 14 படத்தை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டோம். இது சினிமாவுக்கும் நல்லது, எங்கள் இருவருக்கும் நல்லது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. படம் வெளியிடுவது சாதாரண வேலையில்லை. எங்கள் படத்தை கண்டிப்பாக பிப்ரவரி 14 திரைக்கு கொண்டு வருவோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.

“டகால்டி” படத்தயாரிப்பாளர் சௌத்ரி அவர்கள் பேசியது…


இங்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. எனக்கு இப்படம் தலைப்பிரசவம்  போன்றது. எல்லோருக்கும் முதல் படம் என்பது ஒரு குழந்தை பிறப்பது போன்றது தான். சர்வர் சுந்தரம் தயாரிப்பாளர் எங்களுக்காக விட்டுக்கொடுத்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி. இதில் ஒத்துழைத்த தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதிராஜா பேசியது…


இது ஒரு ஆச்சர்யமான மேடை. இந்தப்பிரச்சனையில் ஒரு பெரும் கத்திச்சண்டை நடந்து கொண்டிருந்தது. என்னதான் பிரச்சனை எனக் கேட்கலாம் என்று போனால் இருவருமே கத்தியை கீழே போட்டு விட்டார்கள். இருவர் பக்கமும் நியாயம் இருக்கிறது. இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ளார்கள். இக்காலத்தில் படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது அதை விட கஷ்டமானது. இந்தப் பிரச்சனையில் எங்கள் தீர்ப்பை விட அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் மனது பெருந்தன்மையானது. இருவரும் தங்கமான மனிதர்கள். சர்வர் சுந்தரம் படத்தின் மீது எனக்கு கொஞ்சம் அன்பு அதிகம். அந்த தலைப்பின் மீதிலிருந்தே எனக்கு பல மலரும் நினைவுகள் உண்டு. நாகேஷ் நடித்த அந்தப்படம் முதலில் வந்தபோது நான் உதவி இயக்குநர் கூட இல்லை. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் விட்டுக்கொடுத்துள்ளார். தங்கமான மனிதர் அவர். இருவரும் ஒரே நேரத்தில் வந்தால் அவர்களுக்கும் நஷ்டம் சினிமாவுக்கும் நஷ்டம். இருவரும் சுமூகமாக ஒத்துக்கொண்டு இப்போது படத்தை வேறு வேறு தேதிகளில் ரிலீஸ் செய்கிறார்கள். இருவருக்கும் எனது நன்றிகள். இரு படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: