ரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது : ராகவா லாரன்ஸ்

தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக  நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி  கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன்.  நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்கள் மட்டுமே.
என்னுடைய கருத்துகளுக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் எவ்வகையிலும் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  ரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.     அவர் பேச விரும்பினால், அவர் தானாகவே பேசுவார்.  ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல அவர்.  என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம்.  நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே தான்.  நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல, நான் யாரையும் ஆதரிக்கவில்லை.  நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன், இதைத் தவிர அவர்கள் உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன்.
எனக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன். இதன் காரணமாக எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு தல்லப்பட்டேன்.  எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், அதற்கு நான் சாந்தமாக பதிலளிப்பேன்.  ஜல்லிக்கட்டு சமயத்திலிருந்தே  நான் சாந்தமாகவே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன், அதை தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு சாந்தமாக புரியவைக்க முயற்சிப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: