வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, முதல்வர் பழனிச்சாமியிடம் வலிமை அப்டேட் கேட்ட கதையெல்லாம் நடந்தது. அதோடு, நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் சில அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் இணையத்தில் வெளியானது.

இதைத்தொடர்ந்து, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘வலிமை படம் மீதான உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கொஞ்ச நாள் பொறுத்திருங்கள்’ என பதிவிட்டுள்ளார். போனிகபூரே அதிகாரப்பூர்வமாக வலிமை பட அப்டேட்டை கொடுத்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ajith

இந்நிலையில், நடிகர் அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ‘கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து வரும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு, அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமடைய செய்கிறது. உரிய நேரத்தில் வரும். அது எப்போது என நானும், தயாரிப்பாளரும் சேர்ந்து முடிவு செய்வோம். அதுவரை பொருமையாக இருங்கள். உங்கலுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் வைத்து ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் ,கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்’ என அதில் அவர் கூறியுள்ளார்.