
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் குமார் ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. கதை கேட்கும்போது எனக்கு பிடிக்கவில்லை எனில் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி விட்டேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இந்த படத்தின் கதைதான்’ என பேசினார்.
இது பலத்த எதிர்ப்புக்கு உள்ளானது. உதவி இயக்குனர்கள் பலரும் அஸ்வினின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு படம் கூட நடித்து இன்னும் வெளியாகவில்லை. அதற்குள்ள இவ்வளவு திமிறா? என அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், பல மீம்ஸ்களும் வலம் வந்தது. அதோடு, ஸ்லீப்பிங் ஸ்டார் என்கிற பட்டமும் அஸ்வினுக்கு வந்தது.
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள அஸ்வின் ‘அந்த விழாவில் எனக்கு ஒரு பெரிய விஷயம் நடக்கப்போகிறது என்கிற மகிழ்ச்சியில் இருந்தேன். மேலும், மேடையில் பேசி பழக்கம் இல்லாத படபடப்பிலும் இருந்தேன். அந்த நிலைமையில் என்னால் எப்படி ஆணவமாவும் திமிராவும் பேசமுடியும்?
ஒரு நல்ல படம் பண்ணனும். அஸ்வின் நல்ல படத்துல நடிச்சான்னு எல்லாரும் சொல்லணும். அதுக்கு தகுந்த மாதிரி நான் கதையை தேர்வு செய்தேன் என சொல்ல வந்து ‘கதை பிடிக்கலனா தூங்கிடுவேன்’ என ஜாலியாக பேசிவிட்டேன். அந்த 40ன்னு சொன்னது கூட ஒரு குத்து மதிப்பாகத்தன் சொன்னேன். அது 50 ஆகவும் இருக்கலாம். 10 அல்லது 4 ஆகவும் இருக்கலாம். குத்துமதிப்பா சொன்னதை திமிரா பேசினதா எடுத்துக்கிட்டாங்க.. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது’ என சப்பை கட்டு கட்டினார். ஆனால், அவரை பற்றி ட்ரோல்கள் நின்றபாடில்லை. அஸ்வின் அப்படி பேசியதாலேயே ‘என்ன சொல்லப்போகிறாய்’ திரைப்படம் வெளியாகி கடும் கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இதுபற்றி ஆதங்கப்பட்டுள்ள அஸ்வின் ‘நான் பொதுவாகவே ஒரு சோம்பேறி. அதனால் பழிக்கு பழி என்று எல்லாம் நினைக்க மாட்டேன். இந்த கர்மா நிச்சயம் அவர்கள் மீது திரும்ப வரும். அதை நான் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொள்கிறேன்’ என கோபமாக பதிவிட்டுள்ளார்.