பல மாதங்களாக நடக்காமலிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பு சமீபத்தில்தான் மீண்டும் துவங்கியது. ரஜினி அரசியல் கட்சியை துவங்கவுள்ளதால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. ரஜினி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நடித்துக்கொடுத்து வந்தார்.
இந்நிலையில், மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. எனவே, படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், ரஜினிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்வாக வந்தது. ஆயினும், தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
ரஜினிக்கு நெகட்டிவ் என வந்தாலும் அவர தன்னை 15 நாட்கள் தனைமைப்படுத்திக்கொள்ள திட்டமிட்டார். இதற்கிடையில் அவரின் ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் ‘ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஆனாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லை. எனவே, மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருக்கிறார். ரத்த அழுத்தம் சீரானதும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரது உடலில் எந்த அறிகுறியும் இல்லை’என தெரிவித்துள்ளது.