நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் அஜித் விலக அவருக்கு பதில் நடிக்க வந்தவர். சினிமாவில் ஆர்வமே இல்லாமல் இருந்தவரை நடிக்க வைத்தார் இயக்குனார் வசந்த். அதன்பின் பல படங்களில் சாக்லெட் பாய் வேடம். சேது பார்த்துவிட்டு பாலாவிடம் தன்னை வைத்து ஒரு படம் எடுங்கள் என கோரிக்கை வைக்க அப்படி உருவான திரைப்படம்தான் நந்தா.

அதன்பின் கவுதம் மேனனின் காக்க காக்க, பின்னர் மீண்டும் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.அதன்பின் பல படங்கள் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

மேலும், நல்ல கதையும்சம் கொண்ட திரைப்படங்களையும் அவர் தயாரித்து வருகிறார். ஜெய்பீம் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஒருபக்கம் மற்ற தயாரிப்பாளர்களின் படத்திலும் அவர் நடித்து வருகிறார். அப்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் நடித்துள்ள திரைப்படம்தான் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சூர்யாவுக்கு ரூ.35 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு பின்னால் சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் ரூ.30 கோடி வரை சம்பளம் பெறுகிறார். விஜய் 100 கோடியை நெருங்கி விட்டார்.அஜித் 60 கோடி சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.