பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் முதல்வன். இப்படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் கூறினார் ஷங்கர். ஆனால், அது அரசியல் தொடர்பான படம் என்பதால் ரஜினி நடிக்கவில்லை.
அதன்பின் விஜய் தரப்பிடமும் இப்படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால், அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னரே அர்ஜூனை வைத்து இயக்கினார் ஷங்கர். படமோ சூப்பர் ஹிட்.
இது தொடர்பான கேள்விக்கு ஒரு பேட்டியில் பதில் கூறிய ஷங்கர் ‘என்னுடையை உதவியாளர் விஜய் தரப்பிடம் பேசினார். நான் அதில் தலையிடவில்லை. ஆனால், விஜயின் கால்ஷீட் ஒத்துவரவில்லை என சில காரணங்களால் விஜய் நடிக்கவில்லை. படம் வெளியாகி சில நாட்கள் கழித்து விஜயின் தந்தை எஸ்.ஏ.சி என்னிடம் ‘நாம் இருவரும் நேரில் பேசியிருந்தால் கண்டிப்பாக விஜய் முதல்வன் படத்தில் நடித்திருப்பார். மூன்றாவது நபர் பேசியதால் ஒரு நல்ல படத்தில் விஜய் நடிக்கவில்லை’ என என்னிடம் வருத்தப்பட்டார்.
அதற்கு நான் ‘விடுங்க சார்.. இந்த படம் இல்லை எனில் விஜயை வைத்து வேறு படம் எடுப்போம்’ என நான் கூறினேன்’ என ஷங்கர் அந்த பேட்டியில் கூறியிருந்தார். பல வருடங்களுக்கு பின் நண்பன் படத்தில் ஷங்கரும், விஜயும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.